கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கடந்த சில நாட்களாக பெரிக்காத்தான் நேஷனலின் பாஸ் எம்.பி. அவாங் ஹாஷிமிற்கும் ஜசெக ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும், மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கு இடையிலான கடுமையான சர்ச்சைக்கு மத்தியில் ஒண்டிக்கு ஒண்டி அடித்துக் கொள்ள ஆர்எஸ்என் ராயாரை நாடாளுன்றத்திற்கு வெளியே வரும்படி அந்த பாஸ் எம்.பி. இன்று அழைப்பு விடுத்தது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியில் சுமார் 15 நிமிடம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் வேளையில், கடந்த வாரம் மே 13 கலவர வார்த்தையைப் பாஸ் எம்.பி. அவாங் ஹாஷிம் பயன்படுத்தியது முதல் அவருக்கும் ஜெலுத்தோங் எம்.பி.ராயருக்கும் இடையில் தொடந்து கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் மே 13 கலவரம் வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகத் தன்னை மன்னிப்பு கேட்க வைத்து விட்ட ராயருக்கு எதிராகக் கடுங்சொற்களை அந்த பாஸ் எம்.பி. பயன்படுத்தி வந்த வேளையில், இன்று இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
இதன் உச்சக்கட்டமாக ஒண்டிக்கு ஒண்டி அடித்துக் கொள்ள ஆர்எஸ்என் ராயரை நாடாளுமன்றத்திற்கு வெளியே பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிம் அழைத்த போது அவையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.








