தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில வாட்ஸ்அப் கணக்குகள் தவறுதலாக முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முறையான பயனர் செயல்பாடுகள், விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளாக தவறாக அடையாளம் காணப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, முதற்கட்டமாக சமர்ப்பித்த வாட்ஸ் அப் கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மெட்டா வெளியிட்ட தகவலில், செப்டம்பர் இறுதியில் கோளாறு சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட முறையான கணக்குகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில், மேல்முறையீடு செய்யாத சில பயனர்களின் கணக்குகளும் மீட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, கணக்குகளை அணுக முடியாத நிலை அல்லது பயனர்களின் அனுமதியின்றி கணக்குகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக எம்சிஎம்சி கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, வாட்ஸ் அப் நிறுவனத்திடம் எம்சிஎம்சி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








