பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமக்கு ஆதரவாக 147 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைவசம் வைத்திருந்த போதிலும் அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தூண்டில் போடுகிறார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
தமது தலைமையிலான அரசாஙகத்தை நிலைத்தன்மையுடன் வழிநடத்துவதற்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவை பிரதமர் அன்வார் கொண்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு ஆதரவு சற்று குறைந்த போதிலும் 5 ஆண்டு கால தவணையை பூர்த்தி செய்வதற்கு அன்வார் போதுமான எம்.பி.க்களிள் ஆதரவை பெற்று விட்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கு அன்வார், தூண்டில் போடுகிறார் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் குற்றஞ்சாட்டுவது அடிப்பபடையற்ற வாதமாகும் என்று நுசாந்தரா கல்விக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாஸ்ஸான் கூறுகிறார்.
ஒரு வேளை, பிரதமர் அன்வார், 113 அல்லது 114 எம்.பி.க்களின் ஆதரவை பெற்று இருந்தால் அவரின் அரசாங்கம் கவிழ்வதற்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்ததைவிட அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கும் பட்சத்தில் எதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வலை வீச வேண்டும் என்று அந்த அரசியல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.








