மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களை ஒரு பாடமாகக்கொண்டு, மலேசியா தனது பொருளாதார மாதிரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேபிட்டல் ஏ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பொருளாதாரக் கருத்தரங்கில் பேசிய டோனி, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நாடு, தனது தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருக்காமல், தனது சொந்த உழைப்பு மற்றும் வளங்களைக் கொண்டு தற்காத்துக்கொள்ளும் போக்கை கொண்டிருக்க வேண்டும் என்று டோனி வலியுறுத்தினார்.
குறிப்பாக, அரசு வழங்கும் கோடிக்கணக்கான மானியங்களை மறுஆய்வு செய்து, அந்தத் தொகையை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றார்.
விமானத்துறை குறித்துப் பேசிய டோனி , கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் ஏர்ஏசியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டார். கோவிட் காலத்தை விட தற்போதைய எரிபொருள் விலை உயர்வு பெரும் சவாலாக இருப்பதாகவும், இதனைச் சமாளிக்க அரசாங்கம் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








