கோலாலம்பூர், செப்டம்பர். 12-
மிரட்டல் மற்றும் தேச நிந்தனைத்தன்மையில் கருத்து பதிவேற்றம் செய்த மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரை நிகழ்ந்த இந்த மூன்று சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில் நாட்டின் தலைவருக்கு நிந்தனைத்தன்மையில் மிரட்டல் விடுத்ததற்காக 35 வயது நபர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது சம்பவத்தில் நேற்று நிகழ்ந்த கம்போங் சுங்கை பாரு சம்பவம் தொடர்பில் மிரட்டும் தோரணையில் பதிவேற்றம் செய்த 69 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
மூன்றாவது சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் தலைவருக்கு எதிராக மிரட்டல் விடுத்த 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
இந்த மூன்று சம்பவங்களையும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.








