செர்டாங்,ஜன.16
இந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மலேசியா மீது பற்றும் விசுவாசமும் கொள்ள வில்லை. இன்னமும் தங்களின் பூர்வீக நாட்டுடனே பிணைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இவ்வாறான பிற்போக்குத் தனம் கொண்ட கருத்துகளை இளைய தலைமுறையினர் ஏற்க மாட்டார்கள் எனத் தாம் நம்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தங்களின் தவறுகளை மறைக்கும் முயற்சியில், ஒரு சில முன்னாள் தலைவர்கள் மலாய்க்காரர்கள் மட்டும் இன்றி, சீனர்களும் இந்தியர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை எனக் கூறி வருகின்றனர்.
மகாதீர் கூறிய கருத்தை ஒற்றுமை அரசாங்கம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. முன்னதாக, மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் எனக் கூறி இருக்கிறார் மகாதீர். தனக்குச் சாதகமாக இருப்பவர்களை மட்டும் அவர் குறை கூற மாட்டார் எனக் குறிப்பிட்டார் பிரதமர் அன்வார்.
அனைத்து மலேசிய மக்களும் இந்நாட்டிற்கு வ்சுவாசமாக இருக்கின்றார்கள். ஆகையால், மகாதீர் கூறிய கருத்தை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார் அவர்.
சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவைத் தளமாகக் கொண்ட தந்தி டிவிக்கு மகாதீர் ஒஏட்டி அளித்திருந்தார். மலேசியாவில் இருக்கும் மலாய்க்காரர் அல்லாதோர் குறித்து மகாதீரிடம் வினவப்பட்டது.
மலேசியாவில் 4 மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கும் தேசியக் கூட்டணியின் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் மகாதீர், மலேசியாவில் இருக்கும் சீனர்களும், இந்தியர்களும் இந்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை எனக் கூறி இருக்கின்றார்.
மலாய்க்காரர்கள் அல்லாதோரை "வந்தேறிகள்" எனக் கருதும் அவர், மலேசியக் குடிமக்கள் எனும் அந்தஸ்து கிடைத்து விட்ட போதிலும், தங்களின் சொந்த கலாச்சாரத்தை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என்றார்.
இந்தக் கருத்து, தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான கெராக்கான் உட்பட பலரது விமர்சனத்திற்கு இலக்கானது.








