புத்ராஜெயா, செப்டம்பர்.25-
தொடக்கப் பள்ளிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட தற்போது போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்படுவது குறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
இது தேசிய அளவிலான அச்சுறுத்தல் என்றும், இப்பிரச்சினை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றும் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் விற்கும் முகவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக இனிப்புகள் வழங்குவது போல், அவர்களை போதைப் பழக்கத்திற்கு உள்ளாக்குவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் இன்னும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலைக் கண்டறிவதிலும், அது விநியோகம் செய்யப்படுவதைத் தடுப்பதிலும் இன்னும் அதிக உத்திகள் தேவை என்று ஸாஹிட் தெரிவித்துள்ளார்.








