நீலாய், நவம்பர்.08-
காஜாங் – சிரம்பான், LEKAS (லெக்காஸ்) நெடுஞ்சாலையின் 24.5 ஆவது கிலோமீட்டரில் மலையடிவாரத்தில் மனித எலும்புக்கூடு என்று நம்பப்படும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காலை 11.35 மணியளவில் அந்த நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஒருவர் அந்த எலும்புக்கூட்டை கண்டு பிடித்து, போலீசுக்குத் தகவல் அளித்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.
அந்த மனித எலும்புக்கூடும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவ்விடத்தைச் சோதனைச் செய்ததில் எந்தவோர் அடையாளப் பத்திரமும் கண்டுபிடிக்க முடியவில்லை. தடயவியல் சோதனைக்காக மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திற்கு எலும்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதியில் தங்கள் உறவினர் யாராவது காணவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அப்துல் மாலிக் கேட்டுக் கொண்டார்.








