கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
நாட்டில் இந்து வழிபாட்டுத் தளங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தைக் காண்காணிக்கும் மிகப் பெரிய பொறுப்பு, தொழில் முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணனிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.
ஏற்கனவே மித்ரா திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியவரான டத்தோஸ்ரீ ரமணன், இந்திய சமுதாயம் சார்ந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான புதிய திட்டங்களை வகுப்பதிலும் டத்தோ ஶ்ரீ ரமணன் பொறுப்பேற்பதற்கு அண்மையில் கருவூலத் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மாஹ்மூட் மெரிகான் மூலம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து கடந்த திங்கட்கிழமை அதிகாரப்பூர்வக் கடிதத்தைத் தாம் பெற்றதாக ரமணன் தெரிவித்தார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன்னதாக இவ்வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் பிரதமர் துறை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்குத் தாம் திட்டம் கொண்டுள்ளதாக ரமணன் குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் பொறுப்பை ஏற்றது முதல் இந்திய சமுதாயம் சார்ந்த விவகாரங்களை ரமணன் கவனித்து வருகிறார்.








