கூலிம், நவம்பர்.05-
தனது 4 வயது மகள் மகாலெட்சுமி கனகராஜாவை மூச்சடைக்க வைத்து, கொலை செய்த பின்னர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட துர்க்கா தேவி எழுதியிருக்கலாம் என்று நம்பப்படும் இரு கடிதங்களைப் போலீசார் மீட்டுள்ளனர்.

மீன் தொட்டியின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த தமிழில் எழுதப்பட்ட அந்த இரண்டு கடிதங்களில் தங்களின் மரணத்தில் யாரையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்று துர்க்கா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
30 வயதான துர்க்கா தேவி குணசேகரன் என்ற அந்தப் பெண், அவ்விரு கடிதங்களில் தாம் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதுவே எனது கடைசிப் பயணம். மனச் சங்கடத்தை என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. என் இரண்டு பிள்ளைகளான மகாலெட்சுமியையும், லிவினேசையும் யாரிடமும் விட்டுச் செல்ல முடியாது.
தாயார் என்ற முறையில் அவ்விருவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தச் சம்பவத்திற்கு நல்ல நண்பர்கள் யாரையும் தொடர்புப்படுத்த வேண்டாம். எனது அடையாள கார்டு, ஏடிஎம் அட்டை மற்றும் இதர ஆவணங்களை மீன்தொட்டி முன்புறம் உள்ள மேஜையில் விட்டுச் செல்கிறேன் என்று உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு, துர்க்கா தேவி இரு கடிதங்களை விட்டுச் சென்றுள்ளார் என்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.

கெடா, கூலிம், தாமான் பேரா, லோரோங் பேரா 3 இல் நேற்றிரவு தனது மகளைக் கொலை செய்து விட்டு வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட தொழிற்சாலை பணியாளரான துர்க்கா தேவி, தனது மரணத்திற்கானக் காரணத்தை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று ஸுல்கிஃப்லி அஸிஸான் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் துர்க்கா தேவியின் 7 வயது மகன் லிவினேஸ் கனகராஜா அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். தான் தூக்கில் தொங்குவதற்கு முன்பு, மகனை அலுமினியம் ஏணிப் படியில் ஏறச் சொல்லி, சிலிங் காற்றாடியில் சேலைத் துணியைக் கட்டி, அந்தச் சிறுவனின் கழுத்தில் மாட்டி விட்டு, ஏணிப் படியைத் தள்ளி விட்டு, வேறு அறையில் துர்க்கா தேவி தூக்கில் தொங்கியுள்ளார்.

எனினும் எனினும் சிலிங் காற்றாடி, எடை தாங்க முடியாமல் உடைத்துக் கொண்டு கீழே விழுந்ததால் கழுத்தில் சீராய்ப்புக் காயங்களுடன் அந்த 7 வயது சிறுவன் உயிர் தப்பியதாக ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.

தாம் நம்பியிருந்த காதலன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து மனம் உடைந்த நிலையில் துர்க்கா தேவி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
காயமுற்ற சிறுவன், தற்போது கூலிம் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.








