கோலாலம்பூர், ஜூலை.19-
மலேசியா, பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சுலு சுல்தானகத்தின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்ளும் தரப்பினரின் சட்டவிரோத உலகளாவிய அமலாக்க முயற்சிகளுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் துறையின் சட்டம், நிறுவனச் சீரமைப்புக்கான அமைச்சர் டத்தோ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.
ஸ்பெயின், நெதர்லாந்து நீதிமன்றங்களின் நிலைப்பாட்டிற்கு இணங்க, மலேசியா இந்த வழக்கில் ஒரு திடமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சட்ட விவாதங்களுக்கான நிதியுதவியை வெளிப்படைத்தன்மையுடன் கையாளும் உலகளாவிய கட்டமைப்பை வலுப்படுத்த மலேசியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அஸாலினா குறிப்பிட்டார்.
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வழிமுறைகள், இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான சட்டப் போருக்கான கருவியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இஃது உதவும். கடந்த ஜூலை 7 ஆம் தேதி, பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், சுலு சுல்தானகத்தின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 14.9 பில்லியன் அமெரிக்க டாலர் இறுதி விருதை இரத்து செய்வது தொடர்பான வழக்கில் தனது விசாரணையை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.








