சொந்த தந்தை, அவரின் காதலி ஆகியோரின் கடும் சித்ரவதைக்கு ஆளாகி, கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அண்டை வீட்டுக்காரர்கள் தந்த தகவலினால் மீட்கப்பட்ட 7 வயது இந்திய சிறுவன், அவனது சொந்த தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி ஜோகூர், பூலாய் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்த சிறுவன், ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் அவனது சொந்த தாயாரிடம் சமூக நல இலாகா ஒப்படைத்தது.
தாயாரிடமிருந்து பிரிக்கப்பட்டு தம்முடைய பராமரிப்பில் இருந்த தனது மகனை சித்ரவதை செய்து வந்ததாக 37 வயது ஆர். தயாளன், அவரின் காதலி 39 வயது கே. மகேஸ்வரி ஆகியோர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இறைவனின் அருளினால் தமது மகன் தம்மிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளான் என்று தன்னை அன்னா என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட கோலசிலாங்கூரை சேர்ந்த 34 வயதுடைய அந்த மாது தெரிவித்துள்ளார்.








