Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

Share:

சபா மாநிலத்திற்கு மத்திய அரசின் வருவாயில் 40 விழுக்காடு பங்கினை வழங்க வேண்டும் என்ற கோத்தா கினபாலு உயர்நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மத்திய அரசின் கோரிக்கையை அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.

இதன் மூலம், சபாவுக்கு வழங்க வேண்டிய 40 விழுக்காடு வருவாய் பகிர்வு தொடர்பான முந்தைய நீதிமன்ற உத்தரவு, மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக அமலிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டில் தனது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பின்றி, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், புத்ராஜயா “உண்மையில் பாதிக்கப்படும்” என்று தடை உத்தரவை வழங்கிய நீதிபதி ஜைனி மஸ்லான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற உத்தரவு, பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 180 நாட்களுக்குள், கூட்டரசின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறது என்பதை தாங்கள் கவனிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், 'தடை உத்தரவு' கோரும் மனு நிராகரிக்கப்பட்டால், பொது நிதிகளுக்குக் கடுமையான நிதிசார் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில், இஸ்மாயில் பிராஹிம் மற்றும் கே. முனியாண்டி ஆகிய இரு நீதிபதிகளும் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு, சபா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனுவை விசாரித்த கோத்தா கினபாலு உயர்நீதிமன்றம், 1974 முதல் 2021-ஆம் ஆண்டு வரை “இழந்த ஆண்டுகள்” காலத்தில் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு நிகர வருவாய் பங்கினை வழங்காததன் மூலம் மத்திய அரசு தனது அரசியல் சட்டப் பொறுப்புகளை மீறியுள்ளது என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Related News