கோலாலம்பூர், நவம்பர்.14-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கேஎல்ஐஏ ஒன்றில், இன்று மதியம் பெய்த கனமழையில் கூரையில் விரிசல் ஏற்பட்டு மழை நீர், அருவி போல் விமான நிலையத்திற்குள் கொட்டியது.
இதனால் விமான நிலையத்தின் டிக்கெட் மற்றும் பயணப் பெட்டிகளைப் பதிவுச் செய்யும் ஒரு பகுதியில் நீர் தேங்கியது.
கூரையில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கொட்டியதை, கேஎல்ஐஏ ஒன்றை நிர்வகித்து வரும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் உறுதிப்படுத்தியது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் அதே வேளையில் மின் விநியோகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு சீர்படுத்தப்படும் பணி உடனடியாக முடுக்கி விடப்பட்டதாக எம்ஏஎச்பி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மதியம் தொடங்கி மாலை 6 மணி வரை மோசமான வானிலை காரணமாக கூரையில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விமான நிலையத்திற்குள் நீர் அருவிப் போல் கொட்டும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.








