கோலாலம்பூர், டிசம்பர்.19-
மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று இந்திய இளைஞர்கள் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரச மலேசியப் போலீஸ் படையும், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியும் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காண வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கறிஞர்கள் தங்களின் தொழில்முறை கடமைகளைச் செய்யும் போது மிரட்டப்படுவது, நாட்டின் நீதி நிர்வாகத்தின் அடிப்படைக்கே விடப்படும் சவாலாகும். இது சட்ட அமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் 'அச்சமூட்டும் விளைவை' ஏற்படுத்தும் என்று முகமட் எஸ்ரி கவலை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து இன்றி தங்களின் பணிகளைச் செய்யக்கூடிய சூழல் உறுதிச் செய்யப்பட வேண்டும். வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக இது போன்ற அச்சுறுத்தல் அல்லது அவதூறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








