Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி  பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான்  நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான் நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல 'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மற்றுமொரு முக்கிய உறுப்பினர் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கைது செய்யப்பட்டு மலேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டு உத்தரவின் அடிப்படையில், தாய்லாந்து போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை CID இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், இன்று காலையில் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அந்த நபர், கடந்த 2025 ஜனவரியில் சுபாங் ஜெயாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது. ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு பலத்த காயங்களை ஏற்படுத்தியது மற்றும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் 'கேப்டன் பிரபா' கும்பல், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் கொலை, ஆயுதமேந்திய தாக்குதல், தீவைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளது.

இக்கும்பலைச் சேர்ந்த 33 பேரில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News