புத்ராஜெயா, ஜனவரி.20-
மலேசியாவில் வரும் 2027-ஆம் ஆண்டு முதல், சிறுவர்கள் தங்களது 5 வயதிலேயே பாலர் பள்ளி கல்வியைத் தொடங்கி, 6 வயதில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் தேசியக் கல்வித் திட்டம் 2026 முதல் 2035 அறிமுக விழாவில் பேசிய பிரதமர், இந்த மாற்றம் தொடக்க ஆண்டான 2027 இல் கட்டாயமாக்கப்படாது என்று வலியுறுத்தினார்.
"மாறி வரும் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், குழந்தைகளின் தயார் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, 2027-இல் தங்கள் குழந்தைகளை 6 அல்லது 7 வயதில் முதலாம் ஆண்டில் சேர்க்கும் முடிவைப் பெற்றோர்களே எடுக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றத்திற்குத் தயாராகும் வகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 5 வயதிலேயே பாலர் பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த பாலர் பள்ளி கல்வி முறையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, தரம் மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை 2029 அல்லது 2030-க்குள் செயல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் திறன் மீது கொள்ளப்பட்ட நம்பிக்கையினால் இதை 2027-லேயே அமல்படுத்த தாம் உத்தரவிட்டள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதற்கான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த கல்வி, நிதி மற்றும் பொருளாதார அமைச்சுகள் இணைந்து விரைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"நமது நாடு வெற்றி பெறத் தேவையான அனைத்துத் திறன்களையும் கொண்டுள்ளது, எனவே இந்த மாற்றம் துரிதப்படுத்தப்படும்" என்று பிரதமர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.








