கோலாலம்பூர், டிசம்பர்.29-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலையில் மலாக்கா, டுரியான் துங்காலில் போலீசாரால் மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மலேசிய சைபர் பாதுகாப்பான CSM அறிக்கைக்காக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் காத்திருப்பதாக அதன் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அமைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு கைப்பேசியின் ஆடியோ பதிவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில் துப்பாக்கிச் சூடு நடந்த போது தொடர்புடைய ஒரு முக்கியமான ஆடியோ பதிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும், அதில் உள்ள குரல் மாதிரிகளை ஆய்வு செய்யவும் சைபர் செக்யூரிட்டி மலேசியா அமைப்பின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். தற்போது இந்த CSM அறிக்கையின் ஆய்வு முடிவுகளுக்காகவே விசாரணை நிலுவையில் உள்ளதாக டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை ஆரம்பத்தில் 'கொலை முயற்சி' எனப் போலீசார் வகைப்படுத்தியிருந்தனர். இருப்பினும், போலீசாரின் பரிந்துரைகள் மற்றும் குடும்பத்தினரின் புகார்களைத் தொடர்ந்து, சட்டத்துறை அலுவலகமான AGC, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இந்த வழக்கை, 'கொலை' குற்றவியல் சட்டப் பிரிவான 302 கீழ் மறுவகைப்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.








