புத்ராஜெயா, ஜூலை.15-
மலேசியாவின் புதிய தலைமை நீதிபதி குறித்து விவாதிப்பதற்கு இன்று தொடங்கிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் தாம் ஆஜரானதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
தலைமை நீதிபதி தொடர்பான முடிவை ஆட்சியாளர்கள் மாநாடு விரைவில் அறிவிக்கும் என்றார் அவர். அந்த அறிவிப்பு வரும் வரை அனைவரும் சற்று பொறுமைக் காக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்து எதிர்மறையான கருத்துகள் நிலவி வரும் வேளையில் அதற்கு நாளை விடை கிடைக்கலாம் என்று பிரதமர் கோடிக் காட்டினார்.
இன்று புத்ராஜெயாவில் நிர்வாகத் திறன் மீதான அனைத்துலக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நாட்டிற்குத் தலைமையேற்று வருகின்றவர் என்ற முறையில் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக இதுவரை ஆழமாக விவாதித்ததில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.








