கோலாலம்பூர், பிப்ரவரி.21-
சீனப் பிரஜைகளிடமிருந்து கிரிப்டோகரன்சி (Cryptocurrency) திருடியது தொடர்பாக, 12 போலீஸ் துறை அதிகாரிகள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் டத்ய்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செராஸ் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய காலிட் இஸ்மாயில், விசாரணை சுமுகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய, தற்போது அந்த அதிகாரிகள் களப்பணியிலிருந்து நீக்கப்பட்டு, நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விசாரணை முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்வில் பிரதமரின் துணைவியாரும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் எந்தவோர் அதிகாரிக்கும் எதிராக அரச மலேசிய போலீஸ் படை கடும் நடவடிக்கை எடுக்கும் என முகமட் காலிட் எச்சரித்தார். "நாங்கள் எவ்வித முறைகேடுகளையும் சகித்துக் கொள்ள மாட்டோம். சட்டம் மீறப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்," என அவர் உறுதியளித்தார்
முன்னதாக, காஜாங்கில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தார்.








