Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விளக்கம் அளிக்கத் தவறும் எஸ்பிஆர்எம் நடத்தைக்கு டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தார்மீக பொறுப்பு ஏற்பாரா?
தற்போதைய செய்திகள்

விளக்கம் அளிக்கத் தவறும் எஸ்பிஆர்எம் நடத்தைக்கு டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தார்மீக பொறுப்பு ஏற்பாரா?

Share:

கிள்ளான், செப்டம்பர்.09-

எந்தவொரு காரணத்தையும் சொல்லாமல், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை குறித்து வர்த்தகர் ஒருவர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும், உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

நேர்மை, நியாயம், நம்பகத்தன்மை, தொழில் நெறிமுறை குறித்து அதிகமாகப் பேசும் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, தனது தலைமையில் கீழ் செயல்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகளையும், பாரபட்ச போக்கையும், பொறுப்பற்றச் செயலையும் கண்டிப்பாரா? தட்டிக் கேட்பாரா? என்று கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் கடந்த 15 ஆண்டு காலமாக இமேஜ் லோஜிஸ்டிக் நிறுவனத்தை வழி நடத்தி வரும் நிர்வாக இயக்குநர் பட்டாதி கே. ராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய உரிமைங்களைக் கொண்டுள்ள இந்தியர்களின் லோஜிஸ்டிக் வியாபாரத்தில் நடவடிக்கை என்ற பெயரில் விசாரணை உண்மையிலேயே நடைபெறுகிறதா? அல்லது மற்றவர்கள் தூண்டி விட்டதன் பேரில் எடுப்பார் கைப்பிள்ளையாக அஸாம் பாக்கி தலைமையிலான எஸ்பிஆர்எம் செயல்படுகிறதா என்று 48 வயதான பட்டாதி என்ற பார்த்திபன் வினவியுள்ளார்.

விசாரணையின் போது எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி, கோரப்பட்ட அனைத்து பத்திரங்களும், விளக்கங்களும் வழங்கப்பட்ட பின்னரும், தம்முடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கானக் காரணத்தை விளக்காமல், கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல்,அனுப்படும் மின் அஞ்சலுக்கும் எதிர்வினையாற்றாமல் இருக்கும் இதுதான் எஸ்பிஆர்எம்மின் நம்பகத்தன்மையா? என்று பட்டாதி கேள்வி எழுப்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி எஸ்பிஆர்எம்மைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் ஒரு சுங்கைத் துறை அதிகாரி என நால்வர் தமது நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்ததாக பட்டாதி குறிப்பிட்டார்.

முழுமையான விளங்கங்களை வழங்கிய பின்னரும் நியாயமான காரணங்களின்றி எனது நிறுவனத்தின் இரு வங்கிக் கணக்குகளைச் செயல்படவிடாமல் எஸ்பிஆர்எம் முடக்கியிருப்பது எந்த வகையில் நியாயம் என்று பட்டாதி கேள்வி எழுப்புகிறார்.

எதற்காக தனது நிறுவனத்திற்கு எஸ்பிஆர்எம் அதிகாரிகள் வந்தார்கள் என்பது குறித்து இதுநாள் வரை விளக்கம் அளிக்கப்படவில்லை. அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டும், ஒரு தலைபட்சமாக வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியிருப்பது குறித்து அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி விளக்க வேண்டும் என பட்டாதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பண்டமாரான் போலீஸ் நிலையத்தில் பட்டாதி புகார் அளித்துள்ளார்.

Related News