ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.14-
வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை இலக்காகக் கொண்டு, பேச்சு வார்த்தையின் மூலம் வசியப்படுத்தி, அவர்களின் பணத்தைப் பறித்து வந்ததாக நம்பப்படும் ஐந்து ஈரான் பிரஜைகள் நாளை வெள்ளிக்கிழமை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
கொள்ளைத் தொடர்பில் குற்றவியல் சட்டம் மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் கூடுதலாக மலேசியாவில் தஙகியிருந்தது தொடர்பில் குடிநுழைவு சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த ஐந்து ஈரான் பிரஜைகளும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் கரன்சி நோட்டுகளை வாங்கி அதிசயமாகப் பார்ப்பது போல் நடித்து, அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, இறுதியில் அவர்களே மதி மயங்கி தங்களிடம் உள்ள ரொக்கப்பணம் மற்றும் உடமைகளை ஒப்படைப்பது போல் ஏதோ வசிய சக்தியை இந்த ஐவரும் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆகக் கடைசியாக பினாங்கு பூலாவ் தீக்குஸில் சுற்றுப் பயணிகளிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் போது இந்தக் கும்பல் பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.








