கோலாலம்பூர், டிசம்பர்.27-
தேசிய மோசடி மறுமொழி மையமான என்எஸ்ஆர்சியைச் சேர்ந்த அதிகாரி போல் நாடகமாடிய நபரிடம், தனது ஏடிஎம் அட்டை மற்றும் இரகசிய எண்ணைக் கொடுத்த நபர், தனது மொத்த சேமிப்பு நிதியையும் இழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் படி, அந்நபருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு ஒன்றில், என்எெஸார்சி அதிகாரி எனத் தன்னைக் கூறிக் கொண்ட பெண் ஒருவர், அவருக்கு எதிராக மோசடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.
அரசாங்க நிதியில் நடந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபரின் தொலைப்பேசி எண்ணும் இணைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மிகவும் பதற்றமடைந்த அந்த நபர், தனது வங்கி அட்டையையும், அதன் இரகசிய எண்ணையும், அப்பெண் கூறிய இடத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன் பின்னர், அந்த வங்கிக் கணக்கில் இருந்து படிப்படியாக தனது சேமிப்பு நிதியானது மாயமாவதை அந்நபர் உணர்ந்ததாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள எப்போதும் விழிப்புடன் இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.








