கோலாலம்பூர், அக்டோபர்.18-
மலேசியாவிற்குப் பிழைக்க வந்த இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்களை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களைச் சுரண்டி பிழைத்து வந்த கும்பலைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
25 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 பெண்களுக்கு மலேசியாவில் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, அவர்களை வரழைத்து பாலியல் நடவடிக்கையில் அந்த கும்பல் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
அந்த 7 பெண்களும் கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு, அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்தார்.