Oct 1, 2026
Thisaigal NewsYouTube

ஊழல் தடுப்பில் முன்கூட்டிய நடவடிக்கைக்கு முன்னுரிமை – அப்துல் ஹலிம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஊழல் தடுப்பில் முன்கூட்டிய நடவடிக்கைக்கு முன்னுரிமை – அப்துல் ஹலிம்

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் அதன் 59ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றிய அதன் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஐந்து முக்கிய தலைமைத்துவக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

சமரசமற்ற நேர்மை, நியாயமான சட்ட அமலாக்கம், முன்கூட்டிய ஊழல் தடுப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியவை அந்தக் கொள்கைகளின் முக்கிய அம்சங்கள் என அவர் கூறினார்.

ஊழல் பிரச்சினை பெரிதாகும் வரை காத்திருக்காமல், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னிலக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

எஸ்.பி.ஆர்.எம். தனது 59ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறிய அப்துல் ஹலிம், கலைநிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள், பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இரவு பகல் பாராமல், விடுமுறையின்றி பணியாற்றி வரும் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சேவையைப் பாராட்டுவதே இந்த ஆண்டு விழாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். அவர்களின் கடின உழைப்பு பெரும்பாலும் பொதுமக்களுக்கு வெளியில் தெரியாது என்றாலும், விசாரணைகள் மற்றும் அவை தொடர்பான பணிகளை நிறைவு செய்வதற்காக அவர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

எஸ்.பி.ஆர்.எம். அமைப்பின் ஒட்டுமொத்த சேவையைப் பாராட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆண்டு நிறைவு விழா நடத்தப்படுவதாகக் கூறிய அவர், எஸ்.பி.ஆர்.எம். அடுத்த ஆண்டு தனது 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் என்றும் தெரிவித்தார்.

முன்பு, ஊழல் தடுப்பு அமைப்பான பிபிஆர் (BPR), பின்னர் எஸ்.பி.ஆர்.எம். என மாற்றப்பட்டாலும், நாட்டில் ஊழலை எதிர்த்துப் போராடும் அதன் பணி மற்றும் பொறுப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →