கோலாலம்பூர், ஜூலை.21-
கோலாலம்பூர், ஜாலான் ஹாங் துவாவில் உள்ள பொது அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹாங் துவா தீயணைப்பு, மீட்புப் படையின் 14 வீரர்கள் தீயை முழு வீச்சில் அணைத்ததுடன் தீ அண்டை வீடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தினர் என்று அவ்விலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீடு, 100 விழுக்காடு அழிந்ததுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆடவரின் உடல், கருகிய நிலையில் வீட்டின் குளியல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீச் சம்பவத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் விசாரணைக்கு ஏதுவாக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








