கோலாலம்பூர், பிப்ரவரி.12-
சர்வதேச ஊடகமான புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தன் மீதான குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளது. தனது விசாரணைகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவை என்றும், அதில் தனிப்பட்ட நலன்களோ அல்லது தலையீடுகளோ கிடையாது என்றும் அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
புளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஊகங்கள் மற்றும் அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என எஸ்பிஆர்எம் கருதுகிறது. குறிப்பாக, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் அல்லது சட்ட ரீதியான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அது கூறியுள்ளது.
யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், நாட்டின் சட்ட அமைப்பு மற்றும் நீதித்துறை மூலமே மதிப்பிடப்பட வேண்டும். அதனை விடுத்து, ஊடகங்கள் உருவாக்கும் கதைகளின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாகத் தீர்மானிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஆர்எம் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசாரணையும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமைகிறது. அச்சமோ அல்லது ஒருதலைப்பட்சமான போக்கோ இன்றி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுயேச்சையாகத் தனது பணிகளை முன்னெடுப்பதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளது.








