ஜார்ஜ்டவுன், நவம்பர்.21-
பினாங்கு மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் மொத்தம் 20 நில அமிழ்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம் 8 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில், இவ்வாண்டில் மொத்தம் 68 நிலச்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டில் 28 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இதனிடையே நில அமிழ்வு ஏற்படவுள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய, நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் குழாய்களில், தரையில் ஊடுருவக் கூடிய ரேடார் கருவியானது, சென்சார் அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில உள்கட்டமைப்புத் துறை தலைவர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்த சென்சார்கள் குழாய் ஓட்டத்தில் உள்ள இடையூறுகள் குறித்து முகமைகளுக்கு எச்சரிக்கை செய்வதுடன், நில அமிழ்வு ஏற்படுவதற்குக் காரணமானக் கசிவுகளைக் கண்டறிய உதவும் என்றும் ஸைரில் கீர் ஜொஹாரி பரிந்துரைத்துள்ளார்.








