புத்ராஜெயா, டிசம்பர்.26-
ஹிஜாப் உடையணிந்த நபர் ஒருவர், மது அருந்துவது போல், சமூக ஊடகங்களில் பரவிய காணொளி தொடர்பில், விசாரணை நடத்த கூட்டரசுப் பிரதேச சமய இலாகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்புச் சட்டங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு பாலினத்தவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஷாரியா சட்டத்திற்கு முரணானது என்றும், இச்செயலானது மலேசியாவில் மத உணர்வுகளைத் தூண்டி, மக்களின் நல்லிணக்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் டாக்டர் ஸூல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சம்பந்தப்பட்ட காணொளியை உடனடியாக இணையத்தில் இருந்து அகற்ற மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, இச்சம்பவம் தொடர்பாக, 22 வயது ஆடவரையும், 24 வயது பெண்ணையும், சுபாங் ஜெயாவில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹிஜாப் உடையுடன் மது அருந்துவது போல் அந்த காணொளியில் தோன்றும் நபர், ஓர் ஆடவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிஐடி வழக்கு விசாரணைச் சட்டப் பிரிவு (டி5) இன் – கீழ், சிறப்பு புலனாய்வுப் பிரிவால், இந்த விசாரணையானது நடத்தப்படுவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் குறிப்பிட்டுள்ளார்.








