கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
அண்மையில் சில இராணுவ அதிகாரிகள் பின்னணியில் இருந்து மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் கடத்தல் கும்பல் நடவடிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்துவதில் ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் தொடர்பு கட்டமைப்பு பேருதவியாக இருந்தது என்று அந்த ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
எல்லைகளில் நடைபெறக்கூடிய கடத்தல் நடவடிக்கைள் முழு வீச்சில் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதில் துங்கு இஸ்மாயில் உறுதிப் பூண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடத்தல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு துங்கு இஸ்மாயில் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
நாட்டின் தென்பகுதியில் கடத்தல் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆயுதப்படையைச் சேர்ந்த 5 மூத்த அதிகாரிகள், ஓன்லைன் செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்கள் உட்பட மொத்தம் 10 பேரை கடந்த புதன்கிழமை எஸ்பிஆர்எம் கைது செய்தது தொடர்பில் கருத்துரைக்கையில் அஸாம் பாக்கி மேற்கண்டவாறு விளக்கினார்.








