ஜார்ஜ்டவுன், ஜூலை.15-
பழைய இரும்புக்கடை போர்வையில் இரும்புக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கும்பல்களுக்கு எதிராக 5 மாநிலங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பழைய இரும்பு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்தக் கும்பலினால் அரசாங்கத்திற்கு வர வேண்டிய ஏற்றுமதிக்கான வரிப் பணத்தில் 950 மில்லியன் அல்லது 95 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் கெடா ஆகிய 5 மாநிலங்களை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மலேசிய சுங்கத்துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எஸ்பிஆர்எம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஓப்ஸ் மெட்டல் என்ற பெயரில் எஸ்பிஆர்எம் தொடங்கிய இந்தச் சோதனையில் பினாங்கு, பத்து மாவுங்கில் ஓர் ஆடம்பர வீடமைப்புப் பகுதியில் முதல் கட்டச் சோதனை நடத்தப்பட்டது. இரும்புக்கடையின் உரிமையாளர் என்று நம்பப்படும் அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவரின் மூன்று மாடி பங்களா வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, இரும்புக்கடை தொழில் அதிபரான அந்த அந்நிய நாட்டவர் வீட்டில் இல்லை. அவர் வியாபாரம் தொடர்பாக வெளிநாட்டிற்குச் சென்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் அவரின் மனைவி ஒரு பிள்ளை, அந்த அந்நிய நாட்டவரின் தாயார் என்று நம்பப்படும் ஒரு மூதாட்டி மட்டுமே இருந்ததாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.
கடத்தல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைத் திரட்ட அந்த அந்நிய நபரின் பங்களா வீட்டில் எஸ்பிஆர்எம் சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையை ஊடகவியலாளர்களும் நேரடியாகப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த நபருக்குச் சொந்தமான புக்கிட் மெர்தாஜாமில் ஜாலான் புக்கிட் மிஞாக்கில் உள்ள இரும்புக்கடையிலும் சோதனையிடப்பட்டதாக அது தெரிவித்தது. 30 தொழிலாளர்கள் மத்தியில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அதன் நிர்வாகி உறுதி அளித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








