Apr 20, 2026
Thisaigal NewsYouTube
தந்தை பெரியாரின் சிந்தனைகளே மலேசியத் தமிழர்களின் விழிப்புணர்விற்கு அடிப்படை: டான்ஸ்ரீ க.குமரன் புகழாரம்
தற்போதைய செய்திகள்

தந்தை பெரியாரின் சிந்தனைகளே மலேசியத் தமிழர்களின் விழிப்புணர்விற்கு அடிப்படை: டான்ஸ்ரீ க.குமரன் புகழாரம்

Share:

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் 15-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டமும், மறைந்த திராவிட இயக்கங்களின் முதுப்பெரும் தலைவர்களில் ஒருவருமான ‘கொள்கைக்கனல்’ கெ. வாசுவின் நினைவேந்தல் நிகழ்வும் ஷா ஆலமில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், 1929 மற்றும் 1954-களில் தந்தை பெரியார் மேற்கொண்ட பயணங்களே மலேசியத் தமிழர்களிடையே நிலவிய சாதி மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழித்து, சமூக நீதியை விதைக்கக் காரணமாக அமைந்தன என்றார்.

பேராக் பெரியார் பாசறையின் நிறுவனர் மறைந்த கெ. வாசு முன்னெடுத்த சாதி ஒழிப்பு மாநாடுகளை டான்ஸ்ரீ குமரன் நினைவு கூர்ந்தார்.

பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் பெரு.அ.தமிழ்மணி தனது தலைமையுரையில், "கெ. வாசு போன்ற கொள்கைவாதிகள் விட்டுச்சென்ற நற்பண்புகள் என்றும் அழியாதவை; குறிக்கோளுடன் வாழ்வதே ஒரு மனிதனுக்கு அடையாளம்" என்று குறிப்பிட்டார்.

இயக்கத் துணைத்தலைவர் தன்மானப் பெருஞ்சுடர் த. பரமசிவம் தலைமையில் நடந்த நினைவேந்தலில், டான்ஸ்ரீ குமரன், கெ. வாசுவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். மதிக தேசியத் தலைவர் சா. பாரதி, கொள்கைச்சுடர் ரெ.சு. முத்தையா, மாந்த நேய தி.க.வின் தலைவர் நாகபஞ்சு, மு. மணிமாறன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு. விந்தைக் குமரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் உதவித் தலைவராக மானமிகு ஐ. சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News