தெமர்லோ, நவம்பர்.01-
பகாங் மாநிலத்தில் உள்ள 24 ஆயிரத்து 592 தொழில்முனைவோர்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை, கடனாகவும் மானியங்கள் வடிவிலும் மொத்தம் 425 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அமானா இக்தியார் மலேசியா, தெக்குன் நேஷனல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் இந்த மிகப் பெரிய நிதி உதவி வழங்கப்பட்டதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி மூலம் அம்மாநிலத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அரசாங்கம் தீவிரமாக முயல்கிறது என்றார். கூடுதலாக, இந்த ஆண்டு புதிதாக 56 கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 கூட்டுறவுச் சங்கங்களுக்கு மலேசியக் கூட்டுறவு ஆணையத்தின் சுழல் மூலதன நிதியின் கீழ் 9.03 மில்லியன் ரிங்கிட் நிதி கிடைத்தது. இது பகாங் மாநிலப் பொருளாதாரத்திற்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








