குவாந்தான், ஜூலை.21-
உயர்க்கல்விக் கழகம் மற்றும் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளுக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளிலும் இருக்கைப் பட்டையை அணியும் அமலாக்கத்தை விரிவுபடுத்த சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்பில், ஆகஸ்ட் மாதம் தொடங்கி உயர்க்கல்விக் கழகம் மற்றும் கல்விக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்துகளைப் பரிசோதிக்க மாநில ஜேபிஜே தொழில்நுட்ப மற்றும் அமலாக்கக் குழுக்கள் அக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
பெரும்பாலான அனைத்து உயர்க்கல்விக் கழகங்களுக்கும் முழு தங்கும் விடுதி கொண்ட பள்ளிகளுக்கும் தங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் உள்ளன.
அவை, நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின்படி இருப்பதையும், அவற்றின் ஓட்டுநர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் தங்கள் தரப்பு உறுதிச் செய்யவிருப்பதாக டத்தோ ஏடி ஃபாட்லி குறிப்பிட்டார்.
அதே வேளையில், ஜேபிஜே பணியாளர்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, சோதனை நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.








