கோலாலம்பூர், ஜனவரி.21-
மலேசியத் தற்காப்பு அரண்களான தரைப்படையின் முன்னாள் தளபதி Tan Sri Hafizuddiean Jantan மற்றும் அவரது மனைவி சல்வானி அனுவார் ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்தத் தம்பதியினர் 2001-ஆம் ஆண்டு பணமோசடித் தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமான தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
முன்னாள் தளபதி Tan Sri Hafizuddiean மீது பணமோசடி தவிர, குற்றவியல் சட்டம் 409-ன் கீழ் 'நம்பிக்கை மோசடி மற்றும் பிரிவு 165-ன் கீழ் ஒரு பொது ஊழியராக விலைமதிப்பற்ற பொருட்களைப் பிரதிபலன் இன்றிப் பெற்றுக் கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட உள்ளன.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி Tan Sri Mohd Nizam Jaafar மீதும் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய ஆயுதப்படையைச் சேர்ந்த மேலும் இரண்டு மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர்களின் விசாரணை அறிக்கைகள் விரைவில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான DPP- யிடம் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான எந்தவொரு குற்றத்தையும் சட்டத்தின் அடிப்படையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், எவ்வித சமரசமுமின்றியும் கையாள்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக எஸ்பிஆர்எம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








