கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
அம்பாங் மருத்துவமனையில், மருத்துவர் ஒருவரைத் திட்டித் தாக்க முயன்றதாகக் கூறப்படும் 61 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த 30 வயது மருத்துவர், ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் புகார் அளித்துள்ளார். அம்முதியவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேதி தவறியதால், மருத்துவரைச் சந்திப்பதற்குப் புதிய தேதியைக் கொடுத்ததற்காக ஆத்திரமடைந்து, மருத்துவர் மீது கோபத்தை வெளிப்படுத்தியதாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட அந்த முதியவருக்கு ஏற்கனவே மூன்று குற்றவியல் பதிவுகள் உள்ளன. தற்போது அம்முதியவர் காவல் துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








