கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், தங்களது தொழில் உரிமத்தை நியாயமற்ற முறையில் ரத்து செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கேஎல் ஃபினெரல் செர்விசஸ் (KL Funeral Services) நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கு முன்பு அதற்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டது.
நீதிபதி அலிஸ் லோக், டிபிகேஎல்-இன் முடிவு நடைமுறை முறைகேடு மற்றும் நியாயமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.
நிறுவனத்தின் உரிமம் 2024 டிசம்பர் 10ஆம் தேதி வரை செல்லுபடியாக இருந்தது. ஆனால், 2024 பிப்ரவரி 6ஆம் தேதி முதல் உரிமத்தை ரத்து செய்வதாக டிபிகேஎல் அறிவித்திருந்தது.
இந்த முடிவை ரத்து செய்த நீதிமன்றம், நிறுவனத்துக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட இழப்புகள் நிரூபிக்கப்படாததால் இழப்பீடு வழங்க மறுத்தது. அதேவேளை, வழக்குச் செலவாக 5,000 ரிங்கிட் வழங்க டிபிகேஎல்-க்கு உத்தரவிட்டது.








