பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ள இருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பில் ஒரு முழு அமைச்சர் பதவியையும் . ஒரு துணை அமைச்சர் பதவியையும் ம இ கா கோரியுள்ளது.
ம இ காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம் சரவணனுக்கு முழு அமைச்சர் பதவியையும் , ம இ கா வின் கல்விக் குழு தலைவரான டத்தோ நெல்சன் ரெங்கநாதனுக்கு துணை அமைச்சர் பதவியையும் கட்சி கோரியுள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஃப்எம்திசெய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களான டான் ஶ்ரீ முகிதீன் யாசின், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரின் அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த டத்தோ ஶ்ரீ சரவணனுக்கு இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் ம.இ.கா.வின் முன்னாள் தேசிய இளைஞர் பிரிவு தலைவரான நெல்சன் ரெங்கநாதனுக்கு கட்சியின் கல்விக்குழு தலைவர் என்ற முறையில் கல்வித் துணை அமைச்சர் பதவியை ம.இ.கா. கோரியுள்ளது.
ஏற்கெனவே ம.இ.கா. சார்பில் டத்தின் படுக்கா கோமளா தேவி மற்றும் டத்தோ ப. கமலநாதன் ஆகியோர் துணைக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தனர்.
இந்நிலையில், கல்விப் பின்னணியைக் கொண்டவரான நெல்சன் ரெங்கநாதனுக்கு துணைக் கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ம.இ.கா. பரிந்துரைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








