கோலாலம்பூர், டிசம்பர்.05-
தனது மகளை மீட்டெடுக்கும் விவகாரத்தில் எம். இந்திராகாந்தியைச் சந்திப்பதற்கு போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தொடர்ந்து மறுத்து வருவாரேயானால், அவரின் அடுத்த போராட்டம், புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தை நோக்கி அமைந்திருக்கும் என்று இந்திகாராகாந்தி நடவடிக்கைக் குழு இன்று அறிவித்துள்ளது.
இதற்கான சந்திப்பை ஏற்பாடு செய்வதாக சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தங்களிடம் தெரிவித்து இருந்ததாக இந்திராகாந்தி நடவடிக்கைக் குழுத் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
எனினும் துணை அமைச்சர் குலசேகரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இன்னும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்று தங்களிடம் தெரிவித்து இருப்பதாக அருண் துரைசாமி குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி இந்திராகாந்தி தலைமையில் சுமார் 200 பேருடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை நோக்கித் தாங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் ஐஜிபி தங்களை சந்திக்க மறுத்து விட்டதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.
இந்திராகாந்தியைச் சந்திப்பதற்கு ஐஜிபி தொடர்ந்து மறுப்பாரேயானால், பிரதமர் அலுவகத்தில் போராட்டத்தை நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அருண் துரைசாமி விளக்கினார்.
இந்திராகாந்தியின் மகள் பிரச்சன்னா டிக்ஷாவுக்குப் பிடித்தமான கரடிப் பொம்மையை ஐஜிபியிடம் ஒப்படைப்பதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை. இப்போது அந்த கரடிப் பொம்பையை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.








