இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சிலாங்கூர், உலு யாம் சாலையோரத்தில் நிர்வாணக் கோலத்தில் கிடந்த பொருள் பட்டுவாடா பணியாளரான விநாயகம் ஜெகநாதன் படுகொலையில் புதைந்து கிடக்கும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
தங்கள் போலீஸ் புகாரில் புதிய ஆதாரமாக இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப்பேர்வழிகளின் பெயர்களையும், அதற்கான ஆதாரங்களையும் விநாயகத்தின் குடும்பத்தினர் சமர்ப்பித்துள்ளனர் என்று அக்குடும்பத்தினர் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இக்கொலை தொடர்பில் இதற்கு முன்பு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகப் பேர்வழிகள் தொடர்பாக எந்தவொரு ஆகக்கடைசியான நிலவரம் எதனையும் விநாயகத்தின் குடும்பத்தினர் பெறவில்லை என்று விநாயகத்தின் தாயார் சுமதி கோபால் மற்றும் விநாயகத்தின் மூத்த சகோதரி மலர் ஜெகநாதன் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அருண்துரைசாமி இதனை தெரிவித்தார்.
32 வயதான விநாயகம், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் பட்டபகலில் கும்பல் ஒன்றினால் கடத்தி செல்லப்பட்டு, அவரின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு உலுயாமில் கண்டு பிடிக்கப்பட்டது.








