சென்னை, திருச்சிக்கு 750 ரிங்கிட்டுக்கு விமான டிக்கெட் வழங்கப்படுவதாக டிக் டாக்கில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என விமானப் பயண நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஏர் ஏசியா விமான நிறுவனம் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கான தினசரி விமானச் சேவைகளை நான்கிலிருந்து ஒன்றாகக் குறைத்துள்ளது. பாத்தேக் ஏர் நிறுவனமும் தினசரி இரு சேவைகளை ஒன்றாகக் குறைத்துள்ளதால், பயணிகளின் தேவை அதிகரிப்புக்கு மத்தியில் விமானக் கட்டணங்கள் 2,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகப் பயண நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஏர் ஏசியா, பாத்தேக் ஏர், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் சென்னை, திருச்சிக்கு 750 ரிங்கிட்டில் இருவழிப் பயணம் என டிக் டாக்கில் பொய்யான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக அவை சுட்டிக் காட்டின. குறிப்பாக, திருச்சிக்கு விமானச் சேவையே வழங்காத மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரும் இத்தகைய விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தன.
பயணிகள் இத்தகைய கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பணத்தை இழக்காமல், விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வழிகளில் டிக்கெட் கட்டணங்களை உறுதிப்படுத்திய பின்னரே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் பயண நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.








