கோலாலம்பூரில் குறைந்தது 24 வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களைப் போலீஸ் துறை தேடி வருகிறது.
கடந்த புதன்கிழமை அதிகாலை சௌகிட் பகுதியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபர், இக்கும்பலின் முக்கியத் தலைவராகச் சந்தேகிக்கப்படுகிறார்.
கடந்த மே மாதம் முதல் வெளிநாட்டுப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து இக்கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் கோம்பாக் பகுதியில் கடத்தப்பட்ட டாக்சியையும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோலாலம்பூர் போலீஸ் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ், இக்குற்றச் செயல்களில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கும்பலின் வலையமைப்பையும் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.








