ஜோகூர், தங்காக், கெசாங் பகுதியில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில், வாட்ஸ்அப் குழு உரையாடல் தொடர்பான கருத்து வேறுபாட்டால் 14 வயது மாணவர் மூன்று மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி காலை 8 மணியளவில் வகுப்பறையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதுடைய மூன்று மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவரைத் தொடர்ந்து உதைத்தும் குத்தியும் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
தாக்குதலில் காயமடைந்த மாணவர் மூவார், சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது தலை, மார்பு, வயிறு மற்றும் இடது கை ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்துள்ளதாக தங்காக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முஹமட் ரோஸ்லான் தாலிப் தெரிவித்தார்.
இவ்வழக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 323ஆவது பிரிவின்கீழ் விசாரிக்கப்படுகிறது.








