அகதிகளுக்கான பதிவு ஆவணம், மலேசியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கோ குடியுரிமை பெறுவதற்கோ அனுமதி அளிக்காது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தை வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், அது தற்காலிகமானதாகவும் அரசாங்கத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், புதிய அகதிகள் நாட்டிற்குள் வருவதற்கான அனுமதியாக இந்த ஆவணம் கருதப்படக்கூடாது என்றும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன்பு வந்தவர்களே இதற்குத் தகுதி பெறுவர் என்றும் அவர் விளக்கினார்.
அகதிகளை அடையாளம் கண்டு கண்காணிப்பதுடன், அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது, மூன்றாவது நாட்டில் மறுகுடியேற்றம் செய்வது அல்லது நாடு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை நிர்வகிப்பதே இந்த ஆவணத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.








