Oct 29, 2026
Thisaigal NewsYouTube

லெபனான் நகை நிறுவன வழக்கில் ரோஸ்மாவுக்கு நெருக்கடி: தீர்ப்பை அமல்படுத்த தடையில்லை என வழக்கறிஞர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லெபனான் நகை நிறுவன வழக்கில் ரோஸ்மாவுக்கு நெருக்கடி: தீர்ப்பை அமல்படுத்த தடையில்லை என வழக்கறிஞர் தகவல்

லெபனானைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனமான குலோபல் ராயல்டி திரேடிங் எஸ்எஎல் வழக்கில், டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக வழங்கப்பட்ட 67.5 மில்லியன் ரிங்கிட் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தலாம் என அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் டத்தோ டேவிட் குருபாதம் தெரிவித்துள்ளார்.

அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீர்ப்பை அமல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிபந்தனைகளை ரோஸ்மா பூர்த்தி செய்யத் தவறியதால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அப்பீல் நீதிமன்றம் வெளிப்படையாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் டேவிட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நீதிமன்றம் நிர்ணயித்த 30 நாட்களுக்குள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 67.5 மில்லியன் ரிங்கிட் தொகையை மூன்றாம் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள கணக்கில் ரோஸ்மா செலுத்தத் தவறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேல்முறையீடு தாக்கல் செய்திருப்பது மட்டும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தாது என்றும், மலேசிய சட்டத்தின் படி தங்களது வாடிக்கையாளர் சட்டப்பூர்வமாகத் தீர்ப்புத் தொகையைப் பெற உரிமையுள்ளவர் என்பதையும் டேவிட் சுட்டிக் காட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ரோஸ்மா தாக்கல் செய்த அப்பீல் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், 67.5 மில்லியன் ரிங்கிட் தீர்ப்புத் தொகையை வசூலிக்க முயற்சிப்பது முன்கூட்டிய நடவடிக்கை என ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே டேவிட் குருபாதம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →