மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ்ஸின் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஸையின் மீண்டும் போலீஸ் பணிக்குத் திரும்புவார் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஷுஹைலியை ஏகேபிஎஸ் அமைப்பிலிருந்து போலீஸ் துறைக்கு மாற்றும் முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஷுஹைலி, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஏகேபிஎஸ் அமைப்பின் தலைமை இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கிடையில், ஷுஹைலியின் ஏகேபிஎஸ் பதவிக்காலம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறுவதற்காக சட்டத்துறை அலுவலகத்துக்கும், ஒழுங்குமுறை ஆய்வுக்காக போலீஸ் படை ஆணைய அமைப்புக்கும் இந்த விவகாரம் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஷுஹைலி இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டது மாமன்னரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்ட பணியிடமாற்றம் என்பதால், அந்தப் பணியிடமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னரின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








