சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தலைமையில், வறுமை ஒழிப்பு புளுபிரிண்ட் மற்றும் இந்தியத் தொழில்முனைவோர் உதவித் திட்டமான ஐ-சீட்( i-SEED) ஆகியவற்றின் கீழ், உதவி தேவைப்படும் பயனாளிகளுக்கு வணிகம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான உபகரண உதவிகள் இன்று வழங்கப்பட்டன.
இந்தத் திட்டங்களின் நோக்கம், குறைந்த வருமானம் கொண்ட இந்திய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன், சிறு தொழில்களை வளர்த்து, வருமானத்தை அதிகரித்து, வறுமையிலிருந்து மீண்டு சுயமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
கோம்பாக் மாவட்ட அளவிலான இந்நிகழ்வு, தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள டேவான் பெரிங்கின் மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய வீ. பாபாராய்டு, அரசாங்க உதவிகள் உபகரணங்கள் வழங்குவதுடன் நின்றுவிடாமல், அவற்றின் மூலம் பயனாளிகள் உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் அதிகரித்து, குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள், வறுமை கோட்டிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் தாங்கள் பெற்ற உபகரணங்கள், தங்களின் சிறு தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் அதற்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உதவி பெற்ற இந்தியப் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு மற்றும் கோம்பாக் மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








