கோல திரங்கானு, ஜனவரி.02-
மாராங் சிறைக்குள் போதைப் பொருள் கடத்த, கைதிக்கு உதவி செய்த வழக்கறிஞர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, சிறையில் இருக்கும் தமது கட்சிக்காரருக்கு உதவும் வகையில், அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி, பூலாவ் கம்பிங், ஜாலான் ஹிலிரான் என்ற பகுதியில், அந்த 32 வயதான அந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டதாக திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று கோல திரங்கானு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து சிறைக்குக் கொண்டு வரப்பட்ட அந்த கைதியின் உடலில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், 123 கிராம் Yaba மாத்திரைகளையும், 21 கிராம் கஞ்சாவையும், 13 கிராம் Erimin 5 என்ற போதைப் பொருளையும் போலீசார் அக்கைதியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் மதிப்பானது 16 ஆயிரம் ரிங்கிட் என்றும், அதன் மூலம் 800 போதைப் பித்தர்களை உருவாக்க முடியும் என்றும் முஹமட் கைரி குறிப்பிட்டுள்ளார்.








