அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஊழியர்களிடையே கிரேட் 54 பிரிவுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் இத்தகைய போக்கு, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் இது வழக்கமான நடைமுறையைப் போல் மாறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் அரசியல்வாதிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர துறையைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய லஞ்ச ஊழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தீவிரமடைந்து இருப்பதாக அஸாம் பாக்கி விவரித்தார்.








