கோலாலம்பூர், நவம்பர்.05-
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கும், போலீஸ்துறைக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அந்த பாதிரியார் காணாமல் போன கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதிதியிலிருந்து இவ்விவகாரம் குறித்து போலீசார் அம்பலப்படுத்திய நாள் வரையில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு என்ற அடிப்படையில் மொத்தம் 3,188 நாட்களுக்கு 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அவரின் குடும்பத்திற்கு அரசாங்கமும், போலீஸ்துறையும் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ சூ தியாங் ஜூ உத்தரவிட்டார்.
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் SS4B/10 இல் பாதிரியார் ரேய்மண்ட் கோ காரைச் செலுத்திக் கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத கும்பலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட சம்பவத்தில் சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அல்லது முன்னாள் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய பிரதிவாதிகள் ஒருவர் அல்லது அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம். ஓர் உத்தரவின் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








